சென்னை, ஜன.21: ஜெயலலிதா நினைவிட பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டதால் திட்டமிட்டபடி அடுத்த மாதம் 24-ம் தேதி திறப்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு ஜெயலலிதாவுக்கு தனி நினைவிடம் அமைக்க தமிழக அரசு 2017-ம் ஆண்டு ரூ.50 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கியது.

இந்த நினைவிடம் பீனிக்ஸ் பறவை வடிவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டுமான சாதனங்கள் துபாயில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க துபாயில் இருந்து என்ஜினீயர்களும் சென்னை வந்து முகாமிட்டு கட்டிட பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அருங்காட்சியகம், அறிவுசார் மையம் ஆகியவையும் கட்டப்பட்டு வருகிறது. நினைவிடம் முழுவதும் பளிங்கு கற்கள். இத்தாலி மார்பிள் பதிக்கும் பணிகளும் நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் நுழைவு வாயில் பகுதிகள் புதுப்பிக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா நினைவிடத்தை அவரது பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதியன்று திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் மோடியை வரவழைத்து ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறக்கலாமா என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஜெயலலிதா நினைவிட பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டதால் திட்டமிட்டபடி அடுத்த மாதம் 24-ம் தேதி திறக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.