சென்னை, ஜன.21:

கண்ணகி நகரில் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்தவர் முகேஷ்பாபு (வயது 28). இவர், கண்ணகி நகரில் உள்ள ஒக்கியம்பேட்டை பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி, துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றிவந்துள்ளார்.

கடந்த 20 நாட்களாக பணிக்கு செல்லாத நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில் முகேஷ்பாபு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இது குறித்த தகவலின்பேரில் கண்ணகி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.சம்பவ இடத்தில் இருந்து கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், சக மென்பொறியாளர் கமல் மற்றும் அவரது நண்பர்கள் கணேஷ், விக்னேஷ் ஆகிய 3 பேரும் கொடுத்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அதில் குறிப்பிட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகேஷின் பக்கத்து அறையில் வசித்துவந்த விக்னேஷ் கடந்த 7 நாட்களாக வீட்டில் இல்லாததையடுத்து, கமல் மற்றும் கணேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில வாரங்களாகவே முகேஷ் பணிக்கு வரவில்லை என்றும், அவரை பார்த்து வெகு நாட்களாக ஆகிறது என்றும் அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, முகேஷின் உறவினர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய முகேஷ், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் லட்சக்கணக்கான பணத்தை கடன்வாங்கி அதனை திருப்பி தர முடியாமல் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், இதன்காரணமாக தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

முகேஷின் தற்கொலைக்கு கடன் தொல்லை காரணமாக இருந்தால், எதற்காக 3 பேரின் பெயரை எழுதிவைத்துவிட்டு விபரீத முடிவை எடுத்தார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.