அமராவதி, ஜன.21:

ஆந்திர மாநில தலைநகராக அமராவதி உள்ளது. இந்நிலையில், அதை சட்டசபை தலைநகராக வைத்துக்கொண்டு, நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம், நீதித்துறை தலைநகராக கர்னூல் என 3 தலைநகரங்களை உருவாக்க ஜெகன் மோகன் ரெட்டி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அமராவதியை உருவாக்க நிலம் கொடுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்ய ஆந்திர சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை சட்டசபை முற்றுகை போராட்டம் அறிவித்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து இரு கட்சி தொண்டர்களும் நேற்று சட்டசபை நோக்கி படையெடுத்தனர். அவர்களை வரவிடாமல் தடுக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் சில பெண்கள் மயக்கம் அடைந்தனர். கொல்கத்தா-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டன.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். குண்டூர் எம்.பி. கல்ல ஜெயதேவ் கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு ஊர்வலமாக சென்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, 3 தலைநகரங்களை உருவாக்கும் மசோதாவை, சட்டசபையில் நிதி மந்திரி புக்கனா ராஜேந்திரநாத் தாக்கல் செய்தார். தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு கோஷமிட்டனர். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உரையாற்றியபோது எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் 3 தலைநகரங்களை உருவாக்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று போராட்டத்தில் கைதான தெலுங்குதேசம் எம்பி கல்ல ஜெயதேவ் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்டனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.