சென்னை, ஜன.21:

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கோர மக்களின் கருத்துகளைக் கேட்கத் தேவையில்லை என்ற புதிய சட்ட திருத்தத்தைக் கைவிட வேண்டுமென பிரதமருக்கு கடிதம் மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாறுபாடுகள் துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோருக்கு அவர் தனித்தனியே நேற்று தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த மிகக் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டிருப்பதை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதியிட்ட கடிதத்தின் மூலமாக விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என தெரிவித்திருந்தேன்.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விவசாயிகள், தன்னார்வலர்கள் மற்றும் இதர பங்குதாரர்களிடையே கடுமையான எதிர்ப்பு உள்ளது என்பதைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். காவிரி டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் நெல் விளைச்சலின் தாயாகவும், சூழலியல் சார்ந்த பகுதியாகவும் விளங்கி வருகிறது. இந்தப் பகுதிகளில்தான் பெரும்பாலான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. இந்தத் திட்டங்களை விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பதுடன், உணர்வுரீதியான பிரச்னையாகவும் உள்ளது.

அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மக்களையும், தொடர்புடைய மாநில அரசையும் கலந்தாலோசனை செய்வது மிகவும் அவசியமாகும். இதன்மூலம், திட்டங்களை நிறைவேற்றும்போது அந்தப் பகுதி மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் உறுதி செய்யப்படும். ஆனால், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் செய்யப்பட்டுள்ள இப்போதைய திருத்தமானது புதிய திட்டங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொது மக்களின் அளப்பரிய ஆதரவு கிடைப்பதற்கு எதிராக அமைந்திருக்கிறது.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.