புதுடெல்லி, ஜன.22: குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் கருத்தைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பிரிவுக்கு மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு தாக்கல் செய்த மசோதா கடந்த டிசம்பர் மாதம் கடைசியில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 டிசம்பருக்கு முன் மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த இந்து, கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி, புத்த மற்றும் ஜெயின் ஆகிய ஆறு மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். இதில் முஸ்லீம் மதத்தினர் மற்றும் இலங்கைத் தமிழரும் விடுபட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், இதற்கு தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் 143 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போதும் இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க உத்தரவிடப்பட்டது. இந்த மனுக்கள் இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறுகையில், 143 மனுக்களில் 60 கோரிக்கைகளின் நகல் மட்டுமே அரசுக்கு கிடைத்துள்ளது. எஞ்சியவை இன்னும் கிடைக்கவில்லை என்பதால் மத்திய அரசு பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்டார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் கூறுகையில், மத்திய அரசுக்கு மனுக்களின் நகல்கள் வழங்கப்பட்டுவிட்டன என்றும் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்பதால் இச்சட்டத்திற்கு தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் செயல்பாடுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, இந்த விஷயம் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறது. பெரும் கூட்டம் இருப்பதால் ஒருசில விஷயங்களை மட்டுமே இங்கு எங்களால் விசாரிக்க முடிகிறது. எனவே வழக்கறிஞர்கள் எங்களின் அறைகளுக்கு வந்து கருத்து தெரிவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மத்திய அரசு இன்னும் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து வழக்கின் முக்கியத்துவம் கருதி இதை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனப்பிரிவுக்கு மாற்றுவதாகவும், உயர்நீதிமன்றங்களில் உள்ள இது தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்திற்கே மாற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.