விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிடுக: அமைச்சர்

தமிழ்நாடு

திருச்சி, ஜன. 22:

திருச்சியை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் கூறினார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்தும் 31-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவில், 2- ம் நாள் நிகழ்வாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சு. சிவராசு தலைமை வகித்தார். மாநகரக் காவல் ஆணையர் வி. வரதராஜு முன்னிலை வகித்தார்.

பேரணியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர்தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது: சாலைப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கான பாதுகாப்பாக கருத வேண்டும். திருச்சி மாவட்டத்தில் அதிகளவில் விபத்துகள் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை கருப்பு பகுதிகளாக அடையாளமிட்டு கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

நெடுஞ்சாலைகளில் போதிய பிரதிபலிப்பான்கள், விளக்குகள், சாலைக் குறியீடுகள், வேகத்தடுப்புகள், வேகக் கட்டுப்பாடு எச்சரிக்கைப் பலகைகள் அமைத்து விபத்துகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.