திருச்சி, ஜன. 22:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்
சஞ்சய்தத் கூறினார்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் திருச்சி மாநகராட்சி தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் சஞ்சய் தத் ஆலோசனை நடத்தினார். மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கோவிந்தராஜ், கலை, முன்னாள் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், மாநகர மாவட்ட பொருளாளர் நசீர்,மாவட்ட செயலாளர் ராஜாடேனியல் ராய், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் சஞ்சய்தத் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.

இதன் வெளிப்பாடு தான் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவி உள்ளது. அடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 9 மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.அதேபோல் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிடம் காங்கிரசுக்கு கூடுதல் இடம் கேட்கப்படுமா? என்ற கேள்விக்கும் மாநில தலைமை தான் இதுபற்றி முடிவு செய்யும் என்பதையே எனது பதிலாக அளிக்கிறேன் என்றார்.