சென்னை, ஜன. 22:

தமது வாழ்நாளை அர்ப்பணித்த தந்தை பெரியாரை சிறுமைப் படுத்துகிற வகையில் கருத்து கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கண்டனம் தெரிவிக்கிறேன் என்ற கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1971 இல் நடைபெற்ற சம்பவம் குறித்து கருத்து கூறுகிற நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் 1992 டிசம்பர் 6 ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து அடுத்து வெளிவந்த துக்ளக் வார இதழின் அட்டைப் படத்தில் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க, கருப்பு வர்ணத்தை பூசி தலையங்கத்தில் “அயோத்தில் நடந்த அயோக்கியத்தனம்’ என்று அதன் ஆசிரியர் சோ விமர்சனம் செய்ததை ஏன் நினைவு கூறவில்லை.

அதேபோல, 1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அராஜக ஊழல் ஆட்சியை அகற்றுவதற்கு தி.மு.க. – த.மா.கா. கூட்டணியை ஏற்படுத்துவதற்கு நடிகர் ரஜினிகாந்த் எடுத்த முயற்சிகள் குறித்தும், அதற்கு துக்ளக் ஆசிரியர் சோ துணை புரிந்ததையும் துக்ளக் ஆண்டு விழாவில் சுட்டிக்காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்குமே. நடிகர் ரஜினிகாந்த் 1971 சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டுவிட்டு 1992, 1996 சம்பவங்களை நினைவு கூறாமல் மூடி மறைத்தது ஏன் ? இதில் உள்ள அரசியல் வகுப்புவாத உள்நோக்கம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் கூறுவாரா ?

நடிகர் ரஜினிகாந்த் மீது எங்களுக்கு இன்னும் இருக்கிற நன்மதிப்பின் அடிப்படையில் ஒரு வேண்டுகோள். “நடிகர் ரஜினிகாந்த் அவர்களே, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், வகுப்புவாத தீய சக்திகளுக்கு தயவு செய்து இரையாகிவிடாதீர்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.