புதுடெல்லி, ஜன.23: மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை, தண்டனை நிறைவேற்றத்துக்கான உத்தரவு பிறப் பிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் தூக்கிலிடும் வகையில் காலக் கெடுவை நிர்ணயிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

நிர்பயா பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனையை நிறை வேற்றுவதில், பல்வேறு நடைமுறைகளால் அடுத்தடுத்து தாமதம் ஏற்பட்ட நிலையில், இந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பாலியல் வன்கொடுமை என்பது இந்திய தண்டனையியல் சட்டத்தால் வரையறுக் கப்பட்ட குற்றச்செயல் மட்டுமல்ல; அது, சமூகத்தால் மன்னிக்க முடியாத பயங்கர குற்றமாகும். பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை, கொலை ஆகியவை நமது நாடு எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்னைகளாகும்.

இதுபோன்ற கொடூர குற்றங்களில் ஈடுபட்டவர்கள், சட்டத்தின் மாண்புடன் விளையாடுவதை அனுமதிக்கக் கூடாது. மேலும், சட்டத்தின்படி தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதையும் அனுமதிக்க கூடாது. இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் கடந்த 2014-இல் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றங்கள் தேவை. அந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும், குற்றவாளிகளின் உரிமை களை மையப்படுத்தியே உள்ளது. குற்ற வாளிகளின் உரிமைகளை கருத்தில் கொள்ளும் அதேவேளையில், பாதிக்கப்பட்டவர்களின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மனநிலை, அவர்களது வேதனை, ஆதங்கம், ஒட்டு மொத்த நாட்டு மக்களின் உணர்வு, மரண தண்டனையின் நோக்கம் ஆகிய வற்றையும் கவனத்தில் கொண்டு, வழிகாட்டு நெறிமுறைகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்ட பிறகு, மறுஆய்வு, சீராய்வு, கருணை மனு ஆகிய வாய்ப்புகளும் உள்ளன. இந்த நடைமுறைகளை, தங்களது தண்டனையை தாமதப்படுத்துவதற்காக குற்றவாளிகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. எனவே, மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் அவர்களது தண்டனை நிறைவேற்றத்துக்கான உத்தரவை பிறப்பிக்குமாறு, நீதிமன்றங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும்.

ஒரு வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், சக குற்றவாளிகள் தாக்கல் செய்த மறுஆய்வு, சீராய்வு, கருணை மனு எந்த நிலையில் இருந்தாலும், தண்டனை நிறைவேற்றத்துக்கான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டவருக்கு 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

மரண தண்டனைக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர், சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு காலக் கெடுவை நிர்ணயிக்க வேண்டும். மரண தண்டனை நிறைவேற்றத்துக்கான நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்ற பிறகு, குற்றவாளி கருணை மனு தாக்கல் செய்ய விரும்பினால், அதற்கு 7 நாள் காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.