சென்னை, ஜன.23:  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டும் எனற் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. அதன்படி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் லீக் போட்டியில் சென்னையின் எஃப்சி- ஜாம்ஷெட்பூரின் எஃப்சி அணிகள் மோதுகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்? என்பதை நிர்ணயிக்கப்போகும் ஆட்டம் என்பதால், இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமபலம் வாய்ந்த அணிகள்:
சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆகிய இரு அணிகளும் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி தலா 4 வெற்றிகள் பெற்று, 16 புள்ளிகளுடன் ஜாம்ஷெட்பூர் 6வது இடத்திலும், 15 புள்ளிகளுடன் சென்னை அணி 7வது இடத்திலும் உள்ளது. மேலும், பிளே ஆஃப் சுற்றில் இடம்பெற போகும் 4 அணிகளில் 3 அணிகள் ஏறக்குறைய முடிவாகிவிட்ட நிலையில், 4வது இடத்தை பெறும் முனைப்பில் மற்ற அணிகள் உள்ளதால், இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மண்ணில் களமிறங்கும் சென்னை அணி இன்றைய போட்டியில் சாதிக்க வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுவரை சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகளில் சென்னை அணி, 4-ல் வெற்றி பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.