சென்னை, ஜன.23:  2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.19,000 கோடி மதிப்பீட்டில்
63 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன் மூலம் 83 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை, தரமணியில் இன்று டிட்கோ மற்றும் டி.எல்.எப். நிறுவனம் இணைந்து உருவாக்கவிருக்கும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளுக்கான வளாகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளால் பல புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாடு தொடர்ந்து ஈர்த்து தொழில் துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்ற ஒரே ஆண்டில் 59 திட்டங்கள் தங்கள் வணிக உற்பத்தியைத் துவக்கியுள்ளன. மேலும், 213 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.

வெற்றிகரமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பிறகு, இதுவரை 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 83 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன. தமிழகத்தை உலகளவில் உற்பத்தி மையமாக மாற்றும் தொலைநோக்குடன் நான் செயல்பட்டு வருகிறேன். இந்த லட்சியத்தை நிறைவேற்றும் முனைப்பில், எனது அரசு ஏற்கனவே ஈடுபட்டுள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலும், துபாயிலும் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, அதன் மூலம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன. இதனால் 35 ஆயிரத்து 520க்கு மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. மேற்படி ஒப்பந்தங்களில் 5 நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன என்று பெருமிதத்துடன் கூறினார்.