சென்னை, ஜன. 23:  சென்னையில் நடைபெற்ற 43வது புத்தக திருவிழா கண்காட்சியில் கீழடி அகழாய்வு குறித்த நூல் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 24 மொழிகளில் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதில் 23,000 பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளது.

இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கீழடியில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை நான்காம் கட்ட அகழாய்வினை மேற்கொண்டது. இந்த அகழாய்வில் 5,820 தொல்பொருட்களும் பழந்தமிழரின் கட்டுமானப் பகுதியும் வெளிப்படுத்தப்பட்டன.
சென்னையில் கடந்த 12 நாட்களாக நடைபெற்ற 43வது புத்தகத் திருவிழா வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாவமி பார்வையிட்டார்.

இக்கண்காட்சியினை நாள்தோறும் புத்தக காட்சிக்கு வந்திருந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் கீழடி அகழாய்வு குறித்த நூல் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 24 மொழிகளில் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. 12 நாட்கள் நடைபெற்ற சென்னை புத்தகத் கண்காட்சியில் மட்டும் கீழடி அகழாய்வு நூல் 23,000 பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளது.

தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி மலையாளம், ஹந்தி, சமஸ்கிருதம், ஜப்பானியம், அரபி, கொரியன், ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல்கள் குறிப்பிடத்தக்க அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பிற நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கு வதற்கு அதிக எண்ணிக்கையில் மக்களால் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கீழடி குறித்த ஆய்வறிக்கை குறித்த நூல்களை தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவன வளாகம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சென்னை தலைமை அலுவலகம் மற்றும் சார் அலுவலகங்கள், மதுரை உலகத் தமிழ் சங்கம், மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை ஆகிய இடங்களில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.

மேலும், இக்கண்காட்சியில் இடம்பெற்ற கீழடி அகழாய்வுக் குறித்த மாதிரிகள், வான்வெளிப் பார்வை மாதிரி, தொல்பொருட்களின் முப்பரிமாண வடிவம் அடங்கிய மெய்நிகர் காட்சியகம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவனத்தினை ஈர்த்து பொதுமக்களின் பேராதரவினை பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மாதிரி வடிவங்கள், மெய்நிகர் காட்சியகம் ஆகியவை சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பொது மக்கள் பார்வையிடுவதற்காக விரைவில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.