சென்னை, ஜன. 23: சென்னை உட்பட 5 நகரங்களில் மூடப்பட்ட பத்திரிகை பதிவு மண்டல அலுவலகங்களை திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பத்திரிகை தலைமைப் பதிவாளர் அலுவலகத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் செயல்பட்டு வந்த மண்டல அலுவலகங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் மூடப்பட்டன.

சென்னை உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களில் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகங்களில் பணியாற்றும் கூடுதல் தலைமை இயக்குனர், இயக்குனர், துணை இயக்குனர் ஆகியோர் முறையே கூடுதல் பதிவாளர், துணை பதிவாளர் மற்றும் உதவி பதிவாளர்களாக அறிவிக்கப்பட்டனர். எனினும், ஆன்லைனில் தான் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பத்திரிகை தகவல் அலுவலகங்களின் தலைமை அதிகாரிகளாக தலைமை இயக்குனர் நிலை அதிகாரிகள் தான் பதவி வகிக்கின்றனர். பத்திரிகை தலைமை பதிவாளரும் இதே நிலை அதிகாரி தான். எனவே, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் மூடப்பட்ட பத்திரிகை பதிவு மண்டல அலுவலகங்களை மீண்டும் திறந்து, அவற்றில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு பத்திரிகை தகவல் அலுவலக தலைமை அதிகாரிகள் மூலம் பதிவுச் சான்றிதழ் வழங்க அரசு முன்வர வேண்டும்.’ இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.