சென்னை, ஜன.23:

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் சென்னை என்று கூறுகின்ற அளவிற்கு பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன. மற்ற நிறுவனங்களும் தங்கள் அலுவலகங்களை சென்னையில் தொடங்க விரும்புகின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சென்னை, தரமணியில் இன்று டிட்கோ மற்றும் டி.எல்.எப். நிறுவனம் இணைந்து உருவாக்கவிருக்கும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளுக்கான ‘டிஎல்எப் டவுன்டவுண் சென்னை’ (தொழில்நுட்ப பூங்கா) வளாகத்திற்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்வர் பேசியதாவது:-

தமிழக அரசின் நல்லாட்சிக்கு ஒரு அத்தாட்சியாக வேளாண்மை, தொழில், மனித வள மேம்பாடு, பொது சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக நல திட்டங்கள் உள்ளிட்ட பத்து துறைகளில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஐம்பது குறியீடுகளின் அடிப்படையில், 2019-க்கான மத்திய அரசின் நல் ஆளுமை குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டுகளில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் என இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டினை தமிழக அரசு கூடுதலாக ஈர்த்துள்ளது என்பதை இங்கே பெருமையுடன் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். நாட்டின் முன்னணி இதழான ‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஃபிராஸ்ட் அண்ட் சல்லிவன் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் ஒட்டு மொத்த செயல்பாட்டில் இரண்டாம் இடத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழ்நாடு பெற்றுள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் சென்னை என்று கூறுகின்ற அளவிற்கு பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன. மற்ற நிறுவனங்களும் தங்கள் அலுவலகங்களை சென்னையில் தொடங்க விரும்புகின்றன.

பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய தொழில்நுட்ப அலுவலகங்களை சென்னையில் அமைப்பதற்கு வசதியாக மற்றொரு பெரிய வளாகம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் டிட்கோவும், டி.எல்.எப். நிறுவனமும் கூட்டாக இணைந்து சென்னை, தரமணியில் 27.04 ஏக்கர் நிலப்பரப்பில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கான, பல்வேறு நவீன வசதிகளுடன் ஒரு வளாகத்தினை அமைக்க உள்ளது. இதன் மூலம் 70 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்க வாய்ப்பு உள்ளது.

தொழில் முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசு தமிழக அரசு. அவர்கள் தொழில் தொடங்க அனுமதி மற்றும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் குறுகிய காலத்தில் வழங்குவதும் நமது அரசுதான். இதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக உயரும் என்பதை உறுதிபட இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், டிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, டி.எல்.எப். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீராம் கட்டார், டி.எல்.எப். நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மோஹித் குஜ்ரால் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.