சென்னை, ஜன.23:

சென்ட்ரல்-பேசின்பாலம் மார்க்கத்தில் உள்ள ரெயில்வே மின் அழுத்த கம்பத்தின்மீது ஏறி நின்ற நபரை, ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் இன்று காலை 7 மணியளவில் 1-வது நடைமேடையில் தண்டவாளத்திலிருந்து 20 அடி உயரத்தில் உள்ள உயர்அழுத்த மின்கம்பத்தின் மீது நபர் ஒருவர் ஏறி நின்றுக்கொண்டிருந்துள்ளார்.

இது குறித்த தகவலறிந்ததும், அப்பகுதியில் மின்சாரம் அணைக்கப்பட்டது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த நபரை கீழே இறங்கிவரும்படி கூறியுள்ளனர்.

ஆனால், அந்த நபர் போலீசார் பேச்சுவார்த்தைக்கு இணங்க மறுத்ததையடுத்து, 3 போலீசார் மின்கம்பத்தின்மீது ஏறி சென்று அந்த நபரை பிடித்து காலை 8.15 மணியளவில் பத்திரமாக கீழே இறக்கினர்.

இதன்காரணமாக, சென்னை-கோவை சதாப்தி ரெயில், சென்னை- பெங்களூரு டபிள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில், விஜயவாடா ஜென் சதாப்தி ஆகிய ரெயில்கள் ஒரு மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மோனாதன் (வயது 30) என்பதும், சற்று மனநிலை சரியில்லாதவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள மனநல காப்பகத்தில் மோனாதனை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.