எர்ணாகுளம், ஜன.23:

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இன்று போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நேற்றிரவு இருவரையும் கேரளா அழைத்துச் சென்ற போலீசார், அங்கு அவர்கள் தங்கியிருந்த இடம், தவ்பீக்கின் உறவினர்கள், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது, எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவுநீர் ஓடையில் வீசப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தீவிரவாதிகளுக்கு சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், வில்சன் கொலை வழக்கையும் என்.ஐ.ஏவுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு சிம் கார்டுகளை விநியோகம் செய்த வழக்கில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ், பச்சையப்பன், அன்பரசன், அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட 9 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.