சென்னை, ஜன.24: குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதை அடுத்து 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரு வட்டாட்சியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது.

இளநிலை உதவியாளர், நில அளவர், கிராம நிர்வாக அதிகாரி, தட்டச்சர் போன்ற பதவிகளுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை சுமார் 13 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவு நவம்பரில் வெளியிடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்களை பிடித்தது சந்தேகத்தை எழுப்பியது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்வாணையம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்ததாகவும் தேர்வுக்காக மேற்படி தேர்வர்கள் இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவினால் (எழுதியவுடன் மாயமாகும் மை) விடைகளைக் குறித்துவிட்டு வந்ததாகவும் தெரிய வருகிறது.

மேலும் சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன் 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர்.

இத்தேர்வு குறித்து தேர்வாணையம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தீவிர ஆய்வு செய்தும், சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களைத் தலஆய்வு செய்தும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம் நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில் மேற்கண்ட தவறுகள், இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் மையங்களில் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேற்கூறிய மையங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் வேறு எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.

தேர்வாணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி நடைபெறுகிறது. எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கைவைத்து நேர்மையான முறையில் தேர்வினை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வில் வெற்றியடைந்தவர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கடந்த 13-ம் தேதி காலை தொடங்கிய விசாரணை மறுநாள் வரை நீடித்தது. அந்த இரு மையங்களில் தேர்வெழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான தேர்வர்கள் ஒரே மாதிரியான பதிலைத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சம்பந்தமே இல்லாமல் எதற்காக அந்தத் தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’ என அவர்களிடம் அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு, இறந்த உறவினர்களுக்கு திதி கொடுக்க சென்றதாகவும், ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றதாகவும் அதனால் அங்கேயே தேர்வு எழுதிவிட்டு வந்ததாகவும் கூறியுள்ளனர். தேர்வர்கள் ஒரே மாதிரி அளித்த பதிலால் அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்கள் பார்த்தசாரதி, வீரராஜ் இன்று கைது செய்யப்பட்டனர். குரூப் 4 தேர்வில் பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்தில் முதன்மை தேர்வு அதிகாரியாக இருந்துள்ளனர்.

தேர்வர்கள் கப்பி அடிக்கவும், தேர்வு பதில் தாள் மாற்றிய குற்றச்சாட்டில் கைது சிபிசிஐடியால் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே 2 மையங்களில் தேர்வெழுதி முறைக்கேட்டில் ஈடுபட்ட 99 பேரிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். 13 பேர் இதுவரை ஆஜராகி உள்ளனர். கைது செய்யப்பட்ட தாசில்தார்களிடமும் விசாரணை நடத்திவருகின்றனர். இடைத்தரகர்கள் என்பது யார்? குறித்து எவ்வளவு பணம் பேரம் பேசப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.