நதிநீர் பிரசனை தொடர்பாக எடப்பாடி- பினராயி விரைவில் சந்திப்பு

TOP-2 தமிழ்நாடு

சென்னை, ஜன.24: நதிநீர் பிரச்சனை தொடர்பாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் விரைவில் சென்னை வந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச இருப்பதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் வந்திருக்கும் கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், தமிழகத்தில் கன்னியாகுமரியில் ரூ.15 கோடி மதிப்பில் விருந்தினர் மாளிகை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து ஒரு மாதத்திற்குள் அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார். நதிநீர் பிரச்னையில் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் அடுத்தகட்டமாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விரைவில் சென்னை வந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாகவும் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்தார்
தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், கண்ணகி கோவிலுக்கு நல்ல வழிப்பாதை போட்டு அதனை சுற்றுலாத்தலமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். தொல்லியல் சார்ந்த மிகப்பெரிய அகழாய்வு முசிறிப் பட்டினத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கீழடி மற்றும் முசிறியில் நடைபெறும் பணிகளை ஒப்பிட்டு பார்த்து இணைந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்

கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், கண்ணகி கோவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், அந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும், அது தொடர்பாக விரைவில் இரு மாநில அமைச்சர்கள் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.