சென்னை, ஜன.24: தந்தை பெரியார் குறித்து தவறான கருத்துக்களை கூறிய, நடிகர் ரஜினிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
துக்ளக்கின் 50- வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் கடந்த 1971- ம் ஆண்டு நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில், ராமர், சீதாவை அவமதித்ததாக, பெரியார் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இது, பெரியார்வாதிகள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது.

பெரியார் குறித்து பொய்யான தகவலை நடிகர் ரஜினி கூறியதாக, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டன.
இவ்வாறு. சென்னை திருவல்லிக்கேணி, கோவை காட்டூர் போலீஸ் நிலையங்களில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்கு முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என்று மனுதாரர்களை நோக்கி கேள்வி கேட்டார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கால அவகாசம் வழங்கிய பின் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தைதான் மனுதாரர்கள் அணுக வேண்டும். அதைவிடுத்து, நேரிடையாக இங்கு மனு தாக்கல் செய்தது தவறு என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, மனுதாரர் தரப்பில், வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். இதற்கு அனுமதி அளித்து, மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.