சென்னை, ஜன.24: நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 168-வது படமாகும், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர். மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் வில்லனாக பிரகாஷ் ராஜ், காமெடியனாக சூரி நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வரும் மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்க உள்ளார் என்பது பற்றி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார்.

அந்த கதையை கேட்டவுடன் இதில் நான் நடிப்பதை விட ரஜினிகாந்த் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கமல் கூறியுள்ளார். இதனையடுத்து ரஜினியிடம் சென்று கதையை சொல்லுமாறு லோகிசிடம் கமல் கூறியுள்ளார்.

இந்த கதையை ரஜினியிடம் லோகேஷ் கூறியவுடன் அவருக்கும் கதை மிகவும் பிடித்ததால் சேர்ந்து செய்யலாம் என சொல்லி உள்ளார். இதில் ரஜினி நடிப்பதாக இருந்தால் தானே தயாரிப்பதாகவும், கமல் கூறியுள்ளார்.

இதனால் சிவா படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.