திருப்பூர், ஜன.25:  நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடும் வீரர்களை தவிர நடுவர்கள் உள்ளிட்டோருக்கு, தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது, தமிழர்களை பெருமையடைய செய்துள்ளது.

உலகின் மிகவும் பிரபலமான கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்குத் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் செல்லவில்லை என்றபோதிலும், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளனவாம். அந்தவகையில், இத்தொடரின், ஏற்பாட்டாளர்களுக்கும், நடுவர்களுக்கும், பால் கிட்ஸ் எனப்படும் உதவியாளர்களுக்கும் வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆடைகள் அனைத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்களை மறுசுழற்சி செய்து, அதில் இருந்து கிடைக்கும் நூலிழைகளைக் கொண்டு (டீ-சர்ட்ஸ், ஸ்கர்ட்ஸ், ஷார்ட்ஸ், ஜாக்கெட்ஸ்) தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பின்னலாடைத் தலைநகர் என்று அழைக்கப்படும் திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பின்னலாடைத் தொழிலில் சர்வதேச ஆர்டர்கள் பெறுவதில் 3-வது இடத்திலும், இந்தியாவின் பின்னலாடை தயாரிப்புகளில் சுமார் 50% இங்குதான் தயாரிக்கப்படுகிறது என்றும் திருப்பூரில் உள்ள தொழில் அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.