மெல்போர்ன், ஜன.25: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் ரபேல் நடால் நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹாலேப் ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.

நடப்பு ஆண்டில் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய டென்னிஸ் தொடர், மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கீழ் இன்று நடந்த 3வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், சக நாட்டு வீரரான பப்புளூ கரேனோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், நடால் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4-வது சுற்றில் கால்பதித்தார். இதேபோல், மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டத்தில் ரோமனின் சிமோனா ஹாலெப் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் புடின்ட்சேவாவை வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.

பெடரருக்கு 100-வது வெற்றி:
முன்னதாக நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மனை எதிர்கொண்டார். இதில் பெடரர் தனது 100-வது வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம் இங்கு ‘வெற்றியில் செஞ்சுரி’ போட்ட முதல் வீரர் என்ற சாதனை அவர் படைத்துள்ளார்.

15வயது வீராங்கனையிடம் வீழ்ந்த நடப்பு சாம்பியன்:
மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகாவை 3-6, 4-6 என்ற நேர் செட்களில் வீழ்த்திய 15 வயது இளம் வீராங்கனை கோகோ காப், 4வது சுற்றுக்கு முன்னேறினார்.