சென்னை, ஜன.25: இந்திய நாட்டின் 71-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை கடற்கரையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.

வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘அண்ணா விருது’களை வழங்குகிறார்.

நாட்டின் 71-வது குடியரசுதின விழா இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் குடியரசுதின விழாவையொட்டி 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பெருநகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் 15,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு நாளை குடியரசு தின விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழாப் பகுதிக்கு காலை 7.55 மணிக்கு காரில் வந்திறங்குவார். இவரை தொடர்ந்து காலை 7.57 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் காரில் வந்திறங்குவார். விழா மேடைக்கு வரும் கவர்னரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்.

விழா மேடைக்கு அருகே நடப்பட்டுள்ள உயரமான கம்பத்தில் காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து மலர்களை தூவும்.

பின்னர் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொள்வார். ராணுவம், கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நடைபெறும். பின்னர் போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்-பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, சாரண-சாரணியர், மாணவ மாணவிகளின் அணிவகுப்பும் நடைபெறும். நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் அணிவகுப்பில் இடம்பெறும்.

வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதலமைச்சர் வழங்குவார். குடியரசுதின விழாவையொட்டி, காமராஜர் சாலை பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை காலை முதலே அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

மேலும், நகரில் உள்ள லாட்ஜ், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. நகரின் முக்கிய இடங்கள், சுங்கச்சாவடிகள், மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

அத்துடன், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், வழிப்பாட்டு தலங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் ஆகியவற்றிலும் பயணிகளின் உடைமைகள் ஸ்கேன் செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், குறிப்பாக, சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் தீவிர சோதனைக்கு நடத்தப்படுகிறது. நடைமேடைகளில் சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். நேற்றிரவு இரவு முதலே 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணிநேரமும் இடைவிடாது கண்காணிப்பு பணி நடைபெற்றுவருகிறது.

பணிமனையில் இருந்துவரும் ரெயில் பெட்டிகளிலும் தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் ஏற்றப்படுகின்றனர். சென்னையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது.

மேலும், சென்னையில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்ட கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை சோதனையிட்டு அப்புறப்படுத்தும் பணிகளையும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.