புதுடெல்லி, ஜன.27: என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்புக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க இன்று மறுத்துவிட்டது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களுடன் சேர்த்து இதுவும் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்னதாக என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கணக்கெடுக்கும் பணி ஏப்ரலில் தொடங்கி செப்டம்பரில் முடிவடைவதாக உள்ளது. முதல் கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணி சில மாநிலங்களில் ஏற்கனவே தொடங்கி விட்டது. ஜூன் முதல் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடைபெறுவதாக உள்ளது. முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 23 கேள்விகள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில கேள்விகள் பெற்றோரின் பிறப்பிடம் உள்ளிட்ட பிற தகவல்களை சேகரிப்பதாக இருக்கும் என்பதால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் என்பிஆரில் கேட்கப்படும் கேள்விகள் தவறாக பயன்படுத்தப்படும் என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படக்கூடும். இவை தனி நபர்களின் உரிமைகளை பறிப்பதாக இருக்கும். மேலும் சட்டத்திற்கு புறம்பாக அரசு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கும். மேலும் ஆதார் கணக்கெடுப்பின் போதே இது போன்ற கேள்விகள் கேட்டிருப்பதால் என்பிஆரில் கேட்கப்படும் கேள்விகள் தேவையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் கணக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே சிஏஏ எனப்படும் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து 140-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த வாரம் இவை விசாரணைக்கு வந்த போது சிஏஏ அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

மனுதாரர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த மனுக்கள் விசாரணைக்கு வரும்போது இவற்றுடன் சேர்த்து என்பிஆரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.