திருச்சி, ஜன.27: திருச்சியில் இன்று காலை மார்க்கெட்டுக்கு சென்ற பிஜேபி மண்டல செயலாளரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிஜேபி நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி பாலக்கரை மண்டல பிஜேபி செயலாளராக பதவி வகித்து வந்தவர் விஜயரகு. இவர் இன்று காலை காந்தி மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு ஓடியது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கொலைக்கு காரணமானவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் வெட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில், வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபுவை காந்தி சந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

பிஜேபி நிர்வாகி கொலை செய்த செய்தி அறிந்த கட்சி தொண்டர்கள் மருத்துவமனை முன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த மார்க்கெட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது திருச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.