பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் மகளுடன் பலி

TOP-5 உலகம்

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜன.27: லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் மற்றும் அவரது 13 வயது மகள் உயிரிழந்த சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

41 வயதான பிரயண்ட் அமெரிக்காவின் கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரர் ஆவார். லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவர், 5 முறை என்.பி.ஏ. சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். கூடைப்பந்து உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த பிரயண்ட், ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து 65 கி.மீ. தூரத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிரயண்ட் உயிரிழந்தார். இந்த விபத்தில் பிரயண்டுடன் ஹெலிகாப்டரில் பயணித்த அவரது 13 வயது மகள் ஜியானா மற்றும் 9 பயணிகள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பிரயண்ட்டின் அகால மரணம் கூடைப்பந்து வட்டாரங்கள், ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த விளையாட்டு உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரயண்டின் மரணத்திற்கு உலக அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பிரயண்டுக்கு வான்சா என்ற மனைவியும் உயிரிழந்த ஜியானா உட்பட 4 மகள்கள் உள்ளனர்.