சென்னை, ஜன.27: தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை உதைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய கருத்துக்கு பிஜேபி, அதிமுக ஆகியவை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர ராஜா மற்றும் ஹெலன் சத்யா அவர்களின் திருமணம் கோபாலபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய ஜார்ஜ் பேராலயத்தில் நடைபெற்றது.
திருமணத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது முன் அனுமதி பெறாமலே அவரை சந்திக்கும் நபர்களில் விக்கிரமராஜாவும் ஒருவர் என்று குறிப்பிட்டார்.
மணமகன் – மணமகள் இருவரும் வீட்டில், மத்திய – மாநில அரசு போன்று அமைதியாக இருக்கக் கூடாது, கேள்வி கேட்க வேண்டும் என்றார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அதனை எதிர்க்கின்றன. அதிமுகவும் 12 வாக்குகள் அளித்துள்ளது. இவர்கள் சிஏஏ-வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால் நானே இவர்களை பாராட்டுவேன். தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்காக விருது பெற்றுள்ளதாக முதலமைச்சர் கூறி வருகிறார். முதலில் விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார்.
அவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில், ஸ்டாலின் பேச்சு பண்பாடற்றது என்று குறிப்பிட்டார்.
பிஜேபியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், வன்முறையை தூண்டும் வகையில் ஸ்டாலின் பேசுவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார்.