மெல்போர்ன், ஜன.27:  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 4வது சுற்று ஆட்டத்தில் 4-ம் நிலை வீரர் மெத்வேதேவ்வை போராடி வீழ்த்தி, சுவிஸ் வீரர் வாவ்ரின்கா வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றார்.

மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, காலிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் வகையிலான 4வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின்கீழ் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் டொமினிக் தீம் 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் கயேல் மொன்ஃபில்ஸை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதேபோல், மற்றொரு ஆட்டத்தில், 4ம் நிலை வீரரான ரஷ்யாவின் டானில் மெத்வேதேவ்வுடன்- சுவிஸ் வீரர் வாவ்ரின்கா மோதினார். முதல் செட்டை வாவ்ரின்கா கைப்பற்ற, அடுத்தடுத்த இரு செட்களை மெத்வேதேவ் கைப்பற்றினார். அதற்கு அடுத்த செட்டை மீண்டும் வாவ்ரின்கா கைப்பற்ற, இருவரிடையேயும் கடும் போட்டி நிலவியது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் மிக நீண்ட நேரம் நடந்த இந்த ஆட்டத்தில், 15-ம் நிலை வீரர் வாவ்ரின்கா 6-2, 2-6, 4-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீரரான மெத்வேதேவ்வை வீழ்த்தி, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ள 4வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரபேல் நடால், ஆஸ்திரேலிய வீரர் நிக்கை சந்திக்கிறார். முன்னதாக, நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர், மார்டன் ஃபுசோவிக்ஸை வீழ்த்தினார். இதன்மூலம், 57வது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் காலிறுதிப் போட்டியில் அவர் கால்பதித்துள்ளார். இதேபோல், உலகின் நம்பர் 2 இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிக்கும் 46வது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.