சென்னை, ஜன.28: உலகப் புகழ்பெற்ற மற்றும் துணிச்சல் மிக்க நிகழ்ச்சியான ‘மேன் வெர்சஸ் வைல்டு’-ல் பிரதமர் மோடியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்கிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
|
‘மேன் வெர்சஸ் வைல்டு’ என்ற நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படுகிறது. இதனை முன்னாள் ராணுவ வீரரான பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். இதில் மற்றொரு சிறப்பாக உலகப்புகழ்பெற்ற புள்ளிகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹாலிவுட் வில்ஸ்மித், டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் போன்றவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

கொடிய மிருகங்கள் வாழும் அடர்ந்த வனப்பகுதியில் எந்தவித பாதுகாப்புமின்றி எப்படி தாக்குப்பிடிப்பது என்பதை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் மோடி உத்தரகாண்ட் வனப்பகுதியில் பாதுகாப்பின்றி உலா வந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 530 சதுர கி.மீ. பரப்புள்ள அடர்ந்த வனத்தில், யானைகள், புலிகள் மற்றும் முதலைகள் அதிகமுள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் நடந்த இந்த நிகழ்ச்சி அதிகம் பேரால் பார்க்கப்பட்டு ஒரு டிரெண்டை உருவாக்கியது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மைசூரை அடுத்த பந்திப்பூர் வனப்பகுதியில் யானைகள், புலிகள், கொடிய ராஜநாகம் உள்ளிட்ட பாம்புகள் உள்ளன. குறிப்பாக புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாத அபாயகரமான வனப்பகுதியில் இந்த படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து மைசூர் சென்றார். மைசூரிலிருந்து பந்திப்பூர் வனப்பகுதிக்கு இன்று காலை தனி ஹெலிகாப்டரில் சென்றார். இதன் படப்பிடிப்பு காலை 10 மணிக்கு தொடங்கியது.

இரண்டு நாட்கள் அங்கு தங்கி படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா, ஒளிப்பதிவாளர், உதவி ஒளிப்பதிவாளர், மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் என 13 பேர் மட்டும் அந்த வனப்பகுதிக்குள் சென்றிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக, தமிழக மற்றும் கேரள மாநிலங்களின் எல்லைப்பகுதியான பந்திப்பூர் வனப்பகுதியில் இந்த படப்பிடிப்பு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாள் படப்பிடிப்புக்கு பின்னர் இந்த நிகழ்ச்சி முழுவதுமாக எடிட் செய்யப்பட்டு 15 நாட்களுக்கு பிறகு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

உலகப் புகழ்பெற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளது அவரது ரசிகர்களையும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஏற்கனவே பல நாட்களாக பற்றி எரிந்த அமேசான் வனப்பகுதி, மற்றும் சமீபகாலமாக எரிந்து வரும் ஆஸ்திரேலியா வனப்பகுதி குறித்து செய்திகள் வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் வனப்பகுதியில் ரஜினிகாந்த் சென்றுள்ளது வன ஆர்வலர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக கொடிகட்டிப்பறப்பவர் ரஜினிகாந்த். தற்போது இவர் இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பிரபலமான நடிகராக விளங்கி வருகிறார். சமீப காலமாக ரஜினி எதை செய்தாலும், எதை சொன்னாலும் பெரிதாக உற்று நோக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரபலமான மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பது அவரை புகழின் உச்சாணி கொம்புக்கு கொண்டு செல்லும் எனலாம்.