சென்னை, ஜன.28: சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 29 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை வளாகம் மற்றும் மருத்துவ நேரியல் முடுக்கி கருவியின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், சென்னை, அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் 22 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை வளாகம் மற்றும் மருத்துவ நேரியல் முடுக்கி கருவியின் சேவையை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு உயரிய சிகிச்சை அளிக்கும் வகையில், 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகளில் உயர் தொழில் நுட்ப மருத்துவக் கருவியை நிறுவி வருகிறது. சென்னை, அடையாறு, புற்றுநோய் மையத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி தொடங்கப்பட்டு, தற்போது முடியும் தருவாயில் உள்ளது. நான்கு புற்று நோய் மண்டலங்கள் 59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை, அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேண்மைமிகு மையம் ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய்க்கான புறநோயாளிகள் பிரிவு, கதிர்வீச்சு புற்றுநோய் கருவிகளான நேரியல் முடுக்கி, சி.டி. சிமுலேட்டர், கதிர்வீச்சு கருவி, அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவை ஒருங்கே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவிகள் உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பத்தில் முதன்மையான கருவியாகும். இம்மருத்துவக் கருவிகள், கதிர்வீச்சை உருவாக்கி, அதனை புற்றுநோய் தாக்கப்பட்ட உடல் திசுக்களின்மீது மட்டும் பாய்ச்சி, புற்றுநோய் கிருமிகளை முழுவதுமாக அகற்றி, நோயை குணப்படுத்த பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட உடல் திசுக்களைத் தவிர சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு இக்கருவி எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

புற்றுநோய்க்கு தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவழித்து சிகிச்சை பெறவேண்டிய நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்கள், கட்டணம் ஏதுமின்றி புற்றுநோய்க்கான சிகிச்சையை இதன்மூலம் பெறலாம். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாகவும் மக்கள் இச்சிகிச்சையை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க. சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.