மதுரை, ஜன.28: தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு பிப்ரவரி 5-ம் தேதி தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குடமுழுக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.