சென்னை, ஜன.29: சென்னை தலைமை செயலகத்தில் 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 240 பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். இந்த பேருந்துகள் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் இயக்கப்படும். இது தவிர இரண்டு நடமாடும் பணிமனைகள் இயக்கத்தையும் முதல்வர் அறிமுகப்படுத்தினார்.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5000 பேருந்துகள் இயக்க அரசாணை வெளியிடப்பட்டு ஏற்கனவே தமிழகம் முழுவதும் 5000 புதிய பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டுள்ளது .அதன் தொடர்ச்சியாக அண்மையில் நடைபெற்ற மானியக்கோரிக்கைகள் விவாதத்தின் போது 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்தார். இதன் அடிப்படையில் இன்று முதற்கட்டமாக 240 புதிய பேருந்துகள் இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதில் குறிப்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 37 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 103 பேருந்துகளும், விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு 25 பேருந்துகளும், சேலம் போக்குவரத்து கழகத்திற்கு 10 பேருந்துகளும், கோவை போக்குவரத்து கழகத்திற்கு 20 பேருந்துகளும், கும்பகோணம் போக்குவரத்து கழகத்திற்கு 35 பேருந்துகளும், மதுரை போக்குவரத்து கழகத்திற்கு 5 பேருந்துகளும், திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திற்கு 5 பேருந்துகள் என மொத்தம் 240 பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதலமைச்சர் துவங்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் முதல் கட்டமாக 7 பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதை தொடர்ந்து 10 லட்சம் மதிப்பீட்டில் 2 அம்மா அரசு நடமாடும் பணிமனைகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

2018-19ம் ஆண்டின் போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்படும் அரசு துறை ஊர்திகள் அருகில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளுக்கு எடுத்துச்செல்லப்படுவதன் மூலம் எரிப்பொருளும், காலவிரயமும் ஆவதைத் தடுத்திடும் பொருட்டு, தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ‘அம்மா அரசு நடமாடும் தானியங்கி பணிமனை’ விரைவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன் அடிப்படையில் இன்று திருச்சி மற்றும் தஞ்சாவூரை மையமாகக் கொண்டு செயல்படும் 2 அம்மா அரசு நடமாடும் பணிமனைகள் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

திருச்சியை மையமாக கொண்டு இயங்கும் அம்மா நடமாடும் பணிமனை அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், தஞ்சாவூரை மையமாகக்கொண்டு இயக்கும் அம்மா நடமாடும் பணிமனை திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 1200க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் பழுதாகும் இடத்திற்கே சென்று சரி செய்திட ஏதுவாக, 3 பணியாளர்களை கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதல் எரிப்பொருள் செலவீனமும், கால விரயமும் தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.