சென்னை, ஜன.29: சீனா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க சென்னை விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கேன் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், விசாரணைக்காக பத்து சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறினார்.

கொரோனா வைரசால் ஆட்டிப்படைக்கப்படும் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மூலம் இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சனை உள்ளிட்டவைகளில் ஏதேனும் ஒரு அறிகுறி இருப்பவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கேன் மையம் மற்றும் பத்து சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.ஐந்து மருத்துவ அதிகாரிகள் அங்கேயே இருக்கிறார்கள்.

பயணிகளுக்கு தானாகவே அறிவிக்கும் படிவம் ஒன்று வழங்கப்படும். அதை பூர்த்தி செய்து கொடுத்த உடன் மருத்துவ சோதனை மற்றும் ஸ்கேன் எடுக்கப்படும். அறிகுறி தென்படுபவர்களிடம் தனியாக விசாரணை நடத்தப்படும். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தனி வார்டு தயாராக இருக்கிறது. சென்னை விமான நிலையம் மட்டுமின்றி கோவை, திருச்சி விமான நிலையங்களிலும் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடிக்கடி கை கழுவுதல், முகமூடி அணிதல் ஆகியவை தடுப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும். மருத்துவ பரிசோதனை நடத்துபவர்களும் சீனாவில் இருந்து வந்தவர்களும் இதை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.