ஹமில்டன், ஜன.29: நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியை சூப்பர் ஓவர் மூலம் கைப்பற்றிய இந்தியா,  தொடரையும் வசப்படுத்தியது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த நிலையில், இன்று 3-வது டி20 போட்டி ஹமில்டனில் மதியம் 12.30 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இந்தியா முதல் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி இறுதிவரை போராடி20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து சமன் செய்தது.

ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை விளையாடப்பட்டது. அதில், முதல் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 18 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்தியா சார்பில் களமிறங்கிய ரோஹித்தும், ராகுலும் சேர்ந்து 5 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்த நிலையில், வெற்றி பெற கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு இந்தியாவை வெற்றி பெற செய்தார், ரோஹித்.

இதன்மூலம், இந்தியா அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றதுடன், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை இந்தியா கைப்பற்றுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.