சென்னை, ஜன.30: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தள்ளிவைக்கப்பட்ட 335 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள்.

கோவில்பட்டியில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று கூறி திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். அதிகாரியுடன் கனிமொழி நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி வார்டு, ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகள் உள்ளன.

இந்த பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல்கள் நடைபெற்று ஜனவரி 2-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ம் தேதி பதவியேற்றனர்.

இதனையடுத்து 27 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர்கள், 27 துணைத் தலைவர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகள், 314 துணைத்தலைவர் பதவிகள், 9,618 கிராம ஊராட்சி துணைத்தலைவர் என மொத்தம் 10 ஆயிரத்து 300 ஊராட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க கடந்த 11-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தல் நடைபெற்ற போது போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வராதது, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு, இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் ஆகியவை காரணமாக ஒரு மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், துணைத்தலைவர், 26 ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர், 41 துணைத்தலைவர், 266 கிராம ஊராட்சி துணைத்தலைவர் என 335 பதவிகளுக்கான் மறைமுகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெற்றது.

காலை 10.30 மணிக்கு இந்த தேர்தல் தொடங்கியது. மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் மட்டும் மாலை 3 மணிக்கு நடைபெறுவதாக உள்ளது. கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியம் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றிய தலைவர், திருவண்ணாமலை மாவட்டம் குறிஞ்சாபுரம் ஒன்றிய தலைவர் தேர்தல், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத் தலைவர் தேர்தல் ஆகியவை இன்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன. பிற இடங்களில் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றிய தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணியும், நாமக்கல் ஒன்றியத் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் திலகவதியும் வெற்றி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நல்லூர் ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் நல்லக்கண்ணு தேர்வு செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சிந்து முருகன் வெற்றி பெற்றார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளரும், தஞ்சை மாவட்டம் பேராவுரணி ஒன்றியத் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சசிகலாவும் வெற்றி பெற்றனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியத் தலைவர் தேர்தலில் பாமக வேட்பாளர் சுமதி வெற்றி பெற்றார்.

கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக திமுகவினர் குற்றம்சாட்டி தேர்தல் நடந்த இடத்திற்கு முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கனிமொழி எம்.பி., கீதா ஜீவன் எம்எல்ஏ உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்றனர். தேர்தல் அலுவலருடன் கனிமொழி நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தார். நீங்கள் நியாயமின்றி நடந்து கொள்கிறீர்கள் என்று கனிமொழி கூறினார். தேர்தல் நேர்மையாக நடைபெறுகிறது என்பதை அதிகாரி எடுத்துக் கூறியும் திமுகவினர் சமாதானம் அடையாமல் புகார் மனு கொடுத்தனர்.