சென்னை, ஜன.30: குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமாரின் நொளம்பூர் வீட்டில் இன்று சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
முறைகேட்டை தொடர்ந்து நியமனப் பணிகளை டிஎன்பிஎஸ்சி நிறுத்தி வைத்துள்ளது.

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய புள்ளியான சென்னை நொளம்பூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவர் தேடப்பட்டு வரும் நிலையில் தனிப்படை போலீசார் நொளம்பூர் கவிமணி சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் குரூப்-4 முறைகேட்டைத் தொடர்ந்து குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ள பெரிய கண்ணனுர் கிராமம் இரண்டு தேர்வுகளிலும் நடந்த முறைகேட்டுக்கு மையமாக திகழ்ந்துள்ளது.

இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி 46 வயதான திருவராஜ் என்பவர் குரூப்-4 தேர்வில் முதலிடம் பிடித்ததில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்த சித்தாண்டி (வயது 46) என்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சென்னையில் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கார் டிரைவராக பணியாற்றியிருக்கிறார்.
இவர் இடைத்தரகர்களுடன் சேர்ந்து தன் குடும்பத்தினரை அரசுப்பணியில் சேர வைத்துள்ளார். இவரது மனைவி பிரியா, தம்பிகள் வேல்முருகன், கார்த்தி ஆகியோர் அரசுப் பணிகளில் உள்ளனர். இவர்களில் வேல்முருகன் என்பவர் குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று காரைக்குடியில் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சித்தாண்டியின் மனைவி பிரியா 2018-ல் நடைபெற்ற குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று சென்னையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கார்த்தி எங்கு பணியில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரையும் சித்தாண்டியையும் தேடிவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சித்தாண்டி சிக்கினார்

முறைகேட்டுக்கு மூளையாக திகழ்ந்த போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சித்தாண்டி போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அவரிடமும், விடைத்தாள்களை ஏற்றி வந்த ஏபிடி பார்சல் வேன் ஊழியர்கள் 3 பேர் மற்றும் டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் 3¢பேர் ஆகியோரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.