தஞ்சை, ஜன. 30: தஞ்சை பெரிய கோயிலில் வரும் 5ம்தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதையொட்டி தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களுக்கு இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோபுரத்தில் பொருத்தும் பணி தொடங்கியது.

உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது.இதையொட்டி கோவிலில் நடைபெற்று வந்த அனைத்து திருப்பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன.கோவில் அருகே உள்ள பெத்தண்னன் கலையரங்கத்தில் யாகசாலை பூஜைக்காக பந்தல் அமைக்கும் பணியும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

திருப்பணிக்காக பெருவுடையார் சன்னதியில் உள்ள 216 அடி உயரம் உள்ள மூலவர் கோபுரத்தில் இருந்த கலசம் கடந்த 5-ம் தேதி கழற்றப்பட்டு கீழே கொண்டுவரப்பட்டது. அதேபோல் மற்ற சன்னதி கோபுரங்கள், கலசங்கள் அனைத்தும் திருச்சுற்று மாளிகையில் வைக்கப்பட்டு தங்கமுலாம் பூசும் பணி கடந்த 20 நாட்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து அனைத்து கோபுர கலசங்களும் தங்க முலாம் பூசப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கலசங்களின் தற்போதைய தன்மை குறித்து கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்க பிரிவின் தலைவர் விஞ்ஞானி வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினரும்,இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் உலோகவியல் பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்து பழைய ஆவணங்களின் அடிப்படையில் எடை எந்திரத்தின் உதவியுடன் சரிபார்த்தனர். ஏற்கனவே இதே குழுவினர் தான் கலசங்கள் கழற்றும் போதும் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த கலசங்கள் அனைத்தும் இன்று பலத்த பாதுகாப்புடன் கோவில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் கலசங்கள் அனைத்துக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து கோபுரங்களில் கலசங்கள் பொருத்தும் பணி தொடங்கியது.

பெருவுடையர் சன்னதியில் உள்ள 216 அடி உயரம் உள்ள மூலவர் கோபுரத்தில் கலசம் முதலில் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 15-க்கும் மேற்பட்டோர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த கட்டைகளால் ஆன படிக்கட்டில் ஏறி கயிறு மூலம் கலசங்களை மேலே கொண்டு சென்றனர். சிறிய பாகங்களை தோளில் சுமந்து சென்றனர். இதையடுத்து கலசங்கள் அனைத்தும் பழைய மாதிரி பொருத்தும் பணிகள் தொடங்கின. இந்தக் கலசமானது 3 பெரிய பாகங்களாலும், 5 சிறிய பாகங்களாலும் ஆனது.