புதுடெல்லி, ஜன.30: கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பிஜேபி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை விட 3 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்த வழக்கு அவர் தெலுங்கானா கவர்னர் ஆனதை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் தூத்துக்குடி வாக்காளர்கள் உள்ளிட்ட சிலர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர். இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கனிமொழி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து கனிமொழி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் எதிர்மனுதாரர்கள் 38 பேரும் நான்கு வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.