புதுடெல்லி, ஜன.31: பல துறைகளிலும் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல்நாள் கூட்டத்தில் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என்று புகழ்ந்துரைத்தார். வன்முறை போராட்டம் ஜனநாயகத்தை பலவீனமாக்குகிறது என்றும், ஆரோக்கியமான விவாதமே ஜனநாயகத்துக்கு வலுவூட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் நாள் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

முன்னதாக ராஷ்டிரபதிபவனில் இருந்து அவர் நாடாளுமன்றத்துக்கு முப்படைகள் சூழ அழைத்து வரப்பட்டார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் அவரை அழைத்து வந்தனர்.

ஜனாதிபதி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

அடுத்த பத்து ஆண்டுகள் இந்தியாவுக்கு முக்கியமான கால கட்டமாகும். இந்த காலத்திற்கு பிறகும் நமது அரசியல் சட்டம் நாட்டை வழிநடத்தும் வலிமைப் படைத்ததாக இருக்கிறது. கடந்த ஏழு மாதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த 7 சட்டங்களை அரசு இயற்றியுள்ளது. அயோத்தி தீர்ப்புக்கு பிறகு மக்கள் அமைதி காத்து வருவது பாராட்டத்தக்கது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

புதிய இந்தியாவை உருவாக்கு வதற்காகவே இந்த அரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அதை எனது அரசு நிச்சயம் செய்து காட்டும். பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக இந்தியா பல துறைகளில் உலகத்தரம் மிக்கதாக உயர்ந்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்பது மகாத்மா காந்தியடிகளின் கனவை நனவாக்குவதாக உள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சட்டம். அனைத்து மதத்தினருக்கும் குடியுரிமை வழங்கும் நிலையும் நாட்டில் இருக்கிறது.

(சிஏஏ சட்டத்தை ஜனாதிபதி புகழ்ந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபக் குரல் எழுப்பினார்கள். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.)ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள். இதனை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் சட்ட திட்டங்கள் அனைத்து தரப்பினருக்கும் பலனளித்து வருகிறது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஹஜ் பயணத்திற்கான ஒதுக்கீட்டை சவுதி அரேபியா அதிகரித்தது. இதன் பயனாக 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.

நாளை பட்ஜெட்

ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நாளை பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்க செய்கிறார். நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ள நிலையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் பிப்ரவரி 11 வரை நடைபெறுகிறது. மார்ச் 2-ல் இரண்டாவது கூட்டம் தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுவதாக உள்ளது.

ஜனாதிபதி உரையில் திருக்குறள்

அரசின் பல்வேறு திட்டங்களால் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். விவசாயத்தின் சிறப்பை தமிழ்ப்புலவர் திருவள்ளுவர்
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ என்று எடுத்துரைத்துள்ளார்.

விவசாயிகளுக்கு செலவினத்தில் இருந்து 1.5 சதவீதம் லாபம் பெறுவதற்கு தேவையான திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.