மதுரை, ஜன.31: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ், சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் நடத்தப்படும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது.

தஞ்சை பெருவுடையார் எனும் பெரிய கோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. சமஸ்கிருத மொழியில் கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இந்த விழாவில் முழுக்க முழுக்க தமிழிலேயே திருமுறைகள் சொல்லப்பட வேண்டும், வேத மந்திரங்கள் அனைத்தும் தமிழிலேயே படித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி பெறவில்லை, எனவே அந்த விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை மைலாப்பூரை சேர்ந்த ரமே‌‌ஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை கோவில் கும்பாபிஷேகத்தை சமஸ்கிருதத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் எந்த மொழியில் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்குகள் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சார்பில் தாக்கலான பதில் மனுவில் குடமுழுக்கில் தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளும் பயன்படுத்தப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறி இருந்தது. இதைத் தொடந்து இன்று நடந்த வழக்கின் விசாரணையின் போது தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ்-சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் நடத்தப்படும் என கூறி வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.