ஜெனீவா, ஜன.31: சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனோ வைரஸ் 30 நாடுகளுக்கு மேல் பரவி விட்டதால் உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது. இதனிடையே இந்தியர்களை அழைத்து வருவதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் இன்று வுகான் நகருக்கு விரைந்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி உள்ளது.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக புதிதாக 1,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு நேற்று கொடிய கொரோனா வைரஸ் தொடர்பாக ஒரு சர்வதேச அவசர நிலையை அறிவித்து உள்ளது. இது அரிதாகப் பயன்படுத்தப்படும் ஒரு அறிவிப்பு ஆகும். இது நோயைக் கையாள்வதில் மேம்பட்ட சர்வதேச ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

பலவீனமான சுகாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இது எங்களது மிகப் பெரிய கவலையாகும். இது சீனா மீதான நம்பிக்கையில்லா நடவடிக்கை இல்லை. நோய் பரவுவதை சமாளிக்க விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக சீன அரசாங்கத்தை பாராட்டியது. நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நாம் அனைவரும் இப்போது ஒன்றாகச் செயல்பட வேண்டும். நாம் ஒன்றாக செயல்பட்டால் இதை கட்டுப்படுத்த நிறுத்த முடியும் என கூறினார்.

இது குறித்து இந்திய சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது;-

சுகாதார அமைச்சகம் உலக சுகாதார அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்ல மற்ற நாடுகளில் பரவுகிறது.

சுகாதாரத் துறை அனைத்து விமான நிலையங்களிலும் ஒரு எச்சரிக்கையை அறிவித்துள்ளது. இப்போது ஜனவரி 15 முதல் சீனாவுக்கு பயணம் செய்து வந்துள்ள அனைவரும் வைரசிற்கான சோதனைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று கூறினார்.

இதனிடையே ஏர்இந்தியாவின் போயிங்-7474 விமானம் இன்று காலை மும்பையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றடைந்தது. அங்கிருந்து 11.30 மணிக்கு வுகான் நகருக்கு புறப்பட்டது. 25 இந்தியர்களை ஏற்றி கொண்டு நாளை பிற்பகல் இந்த விமானம் டெல்லி வந்தடையும். டெல்லியில் 14 நாள் தனியாக தங்க வைக்கப்பட்ட பிறகே அவரவர் இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இந்த விமானத்தில் 2 மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், மருந்துகள், முகமூடி மற்றும் கையுரைகளுடன் சென்றுள்ளனர். இந்தியர்கள் நன்கு பரிசோதிக்கப்பட்ட பிறகே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.