சென்னை, ஜன.31: மதுரை மாவட்டத்தில் தர்பார் படத்தால் ரூ.20 கோடி நஷ்டம் என கூறி விநியோகஸ்தர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இருப்பினும் சென்னை, கோவை, திருச்சி மாவட்ட தியேட்டர் அதிபர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி வெளியானது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் படம் ஓடியது. முதல் 4 நாட்களிலேயே தர்பார் படம் 150 கோடி வசூல் செய்ததாக அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தமிழகத்தில் எம்ஜி அடிப்படையில், தர்பார் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கினர். இந்நிலையில் படம் வெளிவந்து 21 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், படத்தின் முழுமையான வசூல் என்ன? என்று தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை. அதற்குள் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சில விநியோகஸ்தர்கள் தர்பார் படத்தால் எங்களுக்கு ரூ.20 கோடி நஷ்டம் என கோரி நேற்று தயாரிப்பு நிறுவனத்தை அணுகி உள்ளனர்.

அவர்கள், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர். பின்னர் முருகதாஸ் வீட்டிற்கு விநியோகஸ்தர்கள் சென்றனர். அவர் தெலுங்குப்பட ஷூட்டிங்கில் இருப்பதால் அவர்கள் அங்கிருந்து கிளம்பி ரஜினி வீட்டிற்கு சென்றனர்.

ஆனால் அவர்களில் யாரும், நேரடியாக படம் நஷ்டம் என பத்திரிகையாளர்களிடம் கூறவில்லை. ஏற்கனவே பாபா, குசேலன், லிங்கா ஆகிய படங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த், விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தார். தற்போது அரசியல் கட்சி தொடங்க உள்ளதால் அவரிடம் இருந்து பணத்தை பறிக்கவே இவர்கள் இப்படி கூறுகிறார்கள் என ரஜினிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், சென்னை, கோவை, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தியேட்டர் அதிபர்கள் தங்களுக்கு தர்பார் படம் நல்ல லாபத்தை தந்துள்ளதாகவும், ஒருபோதும் ரஜினி படம் நஷ்டம் ஆகாது எனவும் கூறினார். இந்த மாவட்டங்களில் கணினி மூலம் டிக்கெட் விற்கப்படுவதால் கணக்கு தெளிவாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் கணினி முறையில் டிக்கெட் வழங்காததால் நஷ்டம் என்று அவர்கள் புகார் கூறுகின்றனர்.