மும்பையில் சின்ன, சின்ன திருட்டு செய்து வருகிறார் நாயகன் சந்தானம். இந்நிலையில், தொழிலதிபராக இருக்கும் ஒருவர், தன் மனத்தில் தோன்றிய ஒரு பெண் உருவத்தை வரைந்து, அந்த பெண்ணை எங்கு இருந்தாலும் கொண்டு வர சொல்லி ஊரில் இருக்கும் ரவுடிகளுக்கு உத்தரவிடுகிறார்.

அந்த பெண்ணின் புகைப்படம் பெரிய ரவுடியாக இருக்கும் ராதாரவியிடம் வருகிறது. ஒரு பிரச்சனையில் ராதாரவி, சந்தானத்தை கொல்ல நினைக்கிறார். அப்போது அவரிடம் இருந்து தப்பிக்க அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் எனக்கு தெரியும் என்று சந்தானம் கூறுகிறார்.

இந்த பெண்ணை குறிப்பிட்ட நாளில் என்னிடம் ஒப்படைத்தால் உன்னை கொல்லாமல் விட்டுவிடுகிறேன். மேலும் பணம் தருவதாகவும் ராதாரவி கூறுகிறார். இதையேற்ற சந்தானம், தெரியாத பெண்ணை கண்டுபிடித்தாரா? ராதாரவியிடம் ஒப்படைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். டைமிங் காமெடி, ஒன் லைன் காமெடியென கலகலப்பூட்டி இருக்கிறார். இவருடன் கூட்டணி அமைத்திருக்கும் யோகிபாபுவின் காமெடியும் கைகொடுத்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா சென், கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். அனுபவ நடிப்பால் ரசிகர்களை ராதாரவி கவர்ந்திருக்கிறார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கும் விஜய் ஆனந்த், திரைக்கதையில் இன்னும் காமெடி காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். சந்தானம் – யோகி பாபு கூட்டணியை சிறப்பாக கையாண்டிருக்கிறார். தீபக்குமாரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. விஜய் நரேனின் இசையும், பின்னணி இசையையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.