சென்னை, பிப்.3: குரூப்-2 தேர்வில் முறைகேடு மூலம் பணியில் சேர்ந்த மேலும் 10 பேரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே 30 பேர் தேடப்பட்டு வந்த நிலையில் அவர்களில் பத்து பேரை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இன்று சிபிசிஐடி போலீசார் பிடித்துள்ளனர்.

குரூப்-4 முறைகேட்டை தொடர்ந்து குரூப்-2 ஏ தெரிவிலும் முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்துள்ளனர். காரைக்குடி முத்துப்பட்டிணத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன், நெல்லை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த ஜெயராணி ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்களில் வேல்முருகன் என்பவர் போசாரால் தேடப்பட்டு வரும் சப்-இன்ஸ்பெக்டர் சித்தாண்டியின் சகோதரர் ஜெயராணி என்பவர் இன்னொரு போலீஸ்கார் முத்து என்பவரின் மனைவி ஆவார். சித்தாண்டியை போலவே முத்து இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார். மேலும் சென்னை கோரட்டூரை சேர்ந்த சுதாதேவி என்பவரும் கைதாகி உள்ளார். இவர் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.இவர் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். ஜெயக்குமாரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து 15-வது இடத்தில் தேர்வு பெற்றதாக தெரிய வந்துள்ளது. முறைகேடுகள் பற்றிய தகவல்கள் நீண்டுகொண்டே போவதால் மேலும் 30 பேரை தேடி வருவதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடைத்தரகர் ஜெயக்குமாரின் கார் டிரைவர் சம்பத்தின் மனைவி தான் இவர் என தெரிய வந்துள்ளது. இதே போல் திருவிக நகரைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 28) என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர் தலைமைச் செயலகத்தில் உள்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே தலைமறைவாகி உள்ள முக்கிய இடைத்தரகர் ஜெயக்குமார் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள சித்தாண்டியின் மனைவி சண்முக பிரியா என்பவரும் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவரும் சென்னையில் அரசு அதிகாரியாக பணியாற்றியவர் எனத் தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவருமே ஜெயக்குமாரிடம் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர் எனத் தெரிய வந்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த சுதா தனது சகோதரர் கண்ணன் மூலம் ஜெயக்குமாரிடம் ரூ. 8 லட்சம் கொடுத்து 288 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர் என தெரிய வந்துள்ளது.

இதனிடையே குரூப்-4 தேர்வில் ஏற்கனவே கைதான 14 பேர் தவிர மேலும் சிலரும் சிக்குவார்கள் எனத் தெரிகிறது. இதில் தொடர்புடைய பத்து பேரிடமும் இன்று சிபிசிஐடி போலீசார் எழும்பூர் தலைமையகத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.