மும்பை, பிப்.4:  தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வில் உள்ள இந்திய அணியின் தொடக்கவீரர் ரோஹித் சர்மா அடுத்துவரும் ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுவது சந்தேகம் என்பதால், அவருக்கு மாற்றாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து எதிரான கடைசி டி20 போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா, 54 ரன்கள் எடுத்திருந்தபோது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக போட்டியை தொடர முடியாமல் பாதியிலேயே ரிட்டயர்டு ஹர்ட் முறையில் ஆட்டத்தை விட்டு வெளியேறினார். தற்போது ஓய்வில் இருக்கும் ரோஹித், இன்னும் முழுமையாக குணமடையாததால் போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளார்.

இது குறித்து பிசிசிஐ-யின் டிவிட்டர் பதிவில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடர்களில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 5-ம் தேதி (நாளை) ஹாமில்டனில் தொடங்குகிறது. 2-வது போட்டி ஆக்லாந்தில் 8-ம் தேதியும், 3-வது போட்டி மவுண்ட் மவுங்கானுயில் 11-ம் தேதியும் நடைபெற உள்ளது, குறிப்பிடத்தக்கது.