புதுடெல்லி, பிப்.4: கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனர்கள் மற்றும் வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய இந்திய அரசு தடை விதித்துள்ளது.
சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவி ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் சீனாவில் பலியாகி உள்ளனர். சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்சில் ஒருவரும் ஹாங்காங்கில் மற்றொருவரும் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
கடந்த 15 நாட்களில் சீனாவில் சுற்றுப்பயணம் செய்த, அங்கு தங்கியிருந்த சீனர்கள் மற்றும் வெளிநாட்டினர் ஆகியோருக்கு இந்தியா வர விசா வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் கொரோனா வைரஸ் பரவியிருப்பதால் வருகிற 7-ம் தேதி முதல் ஏர் இந்தியா விமானங்கள் அங்கு செல்லாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனிடையே சீனாவில் இருந்து ஊர் திரும்பிய சீர்காழியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் திருவாரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்தவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.