சென்னை, பிப்.4: டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்களாக செயல்பட்ட ஜெயக்குமார் மற்றும் போலீஸ்காரர் சித்தாண்டி, அவரது மனைவி பிரியா ஆகியோரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், குரூப் 4 தேர்வு விடைத்தாள்களை அழியும் மையால் திருத்தியதால், அவை மஞ்சள் நிறமாக மாறியிருந்ததை சிபிசிஐடி போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர்.
இதனிடையே இடைத்தரகராக செயல்பட்ட போலீஸ்காரர் முத்துக்குமாரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்து பணியில் சேர்ந்தது தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், ரூப் 2ஏ முறைகேடுகள் தொடர்பாக மேலும் 9 பேரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தைச் சேர்ந்த வடிவு (வயது 44) என்பவர் முறைகேடு செய்து 271.5 மதிப்பெண்கள் பெற்று 29-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் இவர் காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியில் பணிபுரிந்து வருகிறார்.

பெரிய காஞ்சிபுரம் சர்வ தீர்த்த தென்கரை சேர்ந்த ஞானசம்பந்தம் (வயது 30) என்பவர் முறைகேடு செய்து 256 புள்ளி 5 மதிப்பெண்கள் பெற்று 56வது இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அஞ்சல் டெல்லியை சேர்ந்த ஆனந்தன் (வயது 32) என்பவர் முறைகேடு செய்து 277.5 மதிப்பெண்கள் பெற்று 19 ஆவது இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னை செங்குன்றத்தில் உள்ள சார் பதிவாளர் களத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார் இவர்கள் 3 பேரும் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் இடம் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் 15 லட்சம் மற்றும் 13 லட்சம் பணம் கொடுத்து முறைகேடு செய்தது தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா மேற்கு விஜயாபதி சேர்ந்த காவலர் முத்துக்குமார் (வயது 35) என்பவரும் இன்று கைது செய்யப்பட்டார். சென்னை எழிலகத்தில் உதவியாளராக பணிபுரியும் தனது மனைவி மகாலட்சுமி என்பவருக்காக இடைத் தரகராக செயல்பட்டு சித்தாண்டி மூலம் ரூ.8 லட்சத்தை முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் இடம் கொடுத்து முறைகேடு செய்து 276 மதிப்பெண்கள் பெற்று 24-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் மேற்கண்ட 4 பேரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை குரூப்-2 தேர்வில் 9 பேரும் குரூப்-4 தேர்வில் 16 பேரும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
இதனிடையே, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகளிலும் முறைகேடு செய்த முகப்பேர் சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் போலீஸ்காரர் சித்தாண்டி, அவரது மனைவியும் அரசு அலுவலருமான பிரியா ஆகியோரின் வங்கிக் கணக்குகளை சிபிசிஐடி போலீசார் இன்று முடக்கியுள்ளனர்.

இவர்களது கணக்கில் கோடி கணக்கில் பணம் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், குரூப் 4 தேர்வில் 99 விடைத்தாள்கள் அழியும் மை கொண்ட மேஜிக் பேனாவால் திருத்தப்பட்டு இருந்தது. இந்த விடைத்தாள்கள் மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பதை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இவற்றில் 39 விடைத்தாள்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்ற 60 விடைத்தாள்கள் எங்கே? என்று சிபிசிஐடி போலீசார் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், விடைத்தாள்கள் நிறம் மாறியதை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கவனிக்க தவறியது குறித்து அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தனியார் நிறுவனம் ஒன்றில் ஸ்கேன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனத்திடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதனிடையே, குரூப் ஏ முறைகேடு தொடர்பாக இன்று எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு மேலும் 5 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றவருகிறது.