– தஞ்சை ஆர்.தமிழ்செல்வம்-

தஞ்சாவூர், பிப்.5: உலகப் புகழ்பெற்ற ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தஞ்சை பெரியகோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மிக கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 31-ம் தேதி முதல் ஆறு நாட்களாக நடந்த 8 கால யாகசாலை பூஜைகளுக்கு பிறகு இன்று காலை முதல் வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்கினார்கள். ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஓதினார்கள்.

பஞ்சவாத்தியங்கள் முழங்க பிரதான கலசம் யாகசாலையில் இருந்து புறப்பட்டு 213 அடி உயர ராஜகோபுரத்தின் உச்சியை அடைந்தது. சரியாக காலை 9.31 மணிக்கு கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’ என்று பக்திப்பரவசத்துடன் முழங்கினார்கள். அதன் பின் ராஜகோபுரத்தில் உள்ள கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பெரியநாயகி, பெருவுடையார் மற்றும் மூலஸ்தானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக கோயில் உள்ளே பத்தாயிரம் பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. அவர்கள் கோயிலின் கீழே அமர்ந்தனர். கடந்த கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் போல் நடைபெறாமல் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

கோயிலுக்கு வெளியே சுமார் இரண்டு லட்சம் மக்கள் கும்பாபிஷேகத்தை காண திரண்டிருந்தனர். தமிழகம் மற்றும் பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களும் குழுமியிருந்தார்கள்.

சுமார் 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பிஜேபி தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா, முன்னாள் கவர்னர் சண்முகநாதன், மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கூடுதல் காவல்துறை இயக்குனர் ஜெயந்த் முரளி தலைமையில் டிஐஜி லோகநாதன், டிஐஜி தேன்மொழி, எஸ்பி மகேஷ்வரன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
நேற்றிரவு முழுவதும் பெரிய கோயில் வண்ண விளக்குகளால் மிளிர்ந்தது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெறுவதை அடுத்து அதிகாலை முதலே மக்கள் கோயிலை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.

கடந்த 31-ம் தேதி முதல் ஆறு நாட்களாக நடந்த 8 கால யாகசாலை பூஜைகளுக்கு பிறகு இன்று காலை 5 மணி முதல் வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்கினார்கள். ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஓதினார்கள். பஞ்சவாத்தியங்கள் முழங்க பிரதான திருக்கலசம் யாகசாலையில் இருந்து புறப்பட்டு 213 அடி உயர ராஜகோபுரத்தின் உச்சியை அடைந்தது. சரியாக காலை 9.31 மணிக்கு கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’ என்று பக்திப்பரவசத்துடன் முழங்கினார்கள். அப்போது வானில் கருடன் வட்டமிட்டது. இதை பார்த்து பக்தர்கள் பரவசமானார்கள். அதன் பின் ராஜகோபுரத்தில் உள்ள கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெரியநாயகி, பெருவுடையார் மற்றும் மூலஸ்தானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.