புதுடெல்லி, பிப்.5: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்ற தகவலை மக்களவையில் பிரதமர் மோடி இன்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் காலையில் முடிவடைந்த உடன் பிரதமர் மோடி மக்களவைக்கு சென்றார். கேள்வி நேரத்துக்கு முன்னதாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ‘ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த் ஷெத்ரா’ என்ற அறக்கட்டளை அமைப்பதற்கு எனது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்ற தகவலை அவைக்கு மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன் என்று அறிவித்தார்.

அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து மோடி தாக்கல் செய்த அறிக்கையில் அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி சன்னி வக்பு வாரியத்துக்கு உ.பி.மாநில அரசு 5 ஏக்கர் நிலம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி ராமர் கோயில் கட்டுவதை மேற்பார்வையிட அறக்கட்டளை அமைப்பதற்கு விதித்திருந்த கெடு வரும் 9-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தல் 8-ம் தேதி நடைபெற்றாலும் இந்த அறிவிப்பு தேர்தல் விதியை மீறியது ஆகாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.