பக்திப்பரவசத்துடன் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு

TOP-5 ஆன்மீகம் சென்னை

சென்னை, பிப்.5: சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான திருவான்மியூர் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை மருந்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அனைத்து சன்னதிகளிலும் பராமரிப்பு பணிகள் ரூ.75 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அனைத்து விமானங்களும் பஞ்சவர்ணம் தீட்டப்பட்டு, புதுப்பொலிவு படுத்தப்பட்டது. கோவிலில் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், மகா கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது.

கடந்த 1-ம் தேதி முதல் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான யாகசாலை பந்தலில் யாக சாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து 6 கால பூஜைகள் நடைபெற்று இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காலை 9.30 மணி அளவில் அனைத்து விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த வைபவத்தை காண சென்னை முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

கும்பாபிஷேகத்திற்கு பிறகு பக்தர்கள் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. பிரசாதமாக அன்னதானமும் ஆலயம் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அறநிலையத்துறை முதன்மை செயலாளர் க.பணீந்திரரெட்டி, கூடுதல் தலைமை செயலாளர் அசோக் டோங்ரே மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.